.

பூவுலகில் மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் வாழ்வதற்குப் பொருத்தமான வேற்றுக் கிரகத்தைக் கண்டறியும் நடவடிக்கையில் உலக நாடுகள் பெருமளவு பணத்தை வாரி இறைத்து மும்முரமாக ஈடுபட்டுள்ளன. 

சந்திரனில் மனிதர்கள் வாழ்வதற்கு நீர் 'இருக்கிறதா, செவ்வாய்க் கிரகத்தின் சுட்டெரிக்கும் காலநிலையை விஞ்ஞான தொழில் நுட்பங்களால் விஞ்சி அங்கு மனிதனைக் குடியேற்ற முடியுமா, எமது சூரிய மண்டலத்திற்கு வெளியே அச்சு அசலாக பூமியையொத்த கோள் எதுவும் உள்ளதா என்ற ரீதியில் அவர்களது ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. 

இதன் உச்ச கட்டமாக இந்தியா சந்திரனின் தென் துருவப் பிராந்தியத்தில் தனது சொந்த சந்திராயன்-3 விக்ரம் விண்கலத்தை அண்மையில் வெற்றிகரமாக தரையிறக்கி விண்வெளிப் பயணம் தொடர்பான புதிய சாதனையை பதிவு செய்தது.சந்திரனில் மனிதன் வாழ்வதற்கு வழிவகை செய்யக் கூடிய வகையில் நீர் உள்ளதா என்பதைக் கண்டறிவதை இலக்காகக் கொண்ட மேற்படி விண்வெளிப் பயணம் காலத்தின் கட்டாயங்களில் ஒன்றாக நோக்கப்படுகிறது.

பூமிக்கு அப்பால் பூமியையொத்த உயிர் 'வாழ்வதற்கான சூழல் அச்சொட்டாகக் காணப்படுகிறதா என்பதைக் கண்டறியும் இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்ற போதும் இத்தகைய முயற்சிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அந்த முயற்சிகளை நிறைவேற்ற எடுத்துக் கொள்ளப்படும் தீவிர கரிசனமும் கண் முன்னே மனித வாழ்வின் ஆதாரமாக இருக்கும் பூமியின் இருப்பு நிலையை பாதுகாக்க எந்தளவுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்ற கேள்வி இங்கு எழுகிறது. 


மனிதனும் ஏனைய உயிரினங்களும் வளமாக வாழ வழிவகை செய்யக் கூடிய வகையில் நீர், காற்று, மண், இயற்கை வளங்கள் என்பவற்றை உள்ளடக்கி புவி வாழ் உயிரினங்களை சூரியனிலிருந்து வரும் தீய கதிர்கள் தீண்டாத வகையில் ஓசோன் என்ற மென் திரையால் மூடி பாதுகாக்கப்பட்ட ஒன்றாக இந்தப் பூவுலகம் உள்ளது.ஆனால் மனிதனின் இயற்கை அன்னையை சீண்டிப் பார்க்கும் சமூகப் பொறுப்புணர்வற்ற செயற்பாடுகளால் விளைந்த மாசாக்கத்தால் துன்புற்று வரும் இயற்கை அன்னை தனது சீற்றத்தை "காலநிலை மாற்றமாக உருவெடுத்து சூறாவளிகளாகவும் வரட்சியாகவும் அடைமழையாகவும் வெள்ளமாகவும் மின்னலாகவும் பொசுக்கும் காட்டுத் தீயாகவும் எரிமலைக் குமுறல்களாகவும் பூமியதிர்ச்சியாகவும் காலத்திற்குக் காலம் வெளிப்படுத்தி வருகிறாள். 

மனித செயற்பாடுகளால் நிலம், நீர் மற்றும் வளி என இயற்கைக் கொடைகள் அனைத்தும் மாசாக்கம் அடைவது தொடர்கின்ற நிலையில் அவற்றில் உயிர் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான காற்றைப் பாதிப்பதும் இன்று உலகை ஆட்டிப் படைக்கும் காலநிலை மாற்றத்திற்கு வித்திடுவதுமாகவுள்ள வளி மாசாக்கம் என்பது பெரும் அச்சு றுத்தல் தரும் ஒன்றாக மாறியுள்ளது. 

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையானது 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற 74 ஆவது கூட்டத்தொடரின் இரண்டாவது சபைக் கூட்டத்தில் எமது வாழ்வின் ஆதாரத் தேவையாகவுள்ள வளிமண்டலத்தின் தூய்மையை உறுதிப்படுத்துவதற்கும் முயற்சிகளுக்கான பங்காளித்துவம் அது தொடர்பான மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கவும் வளி மாசாக்கத்தை முறியடிக்கத் தேவையான பொறுப்பைப் பகிர்வதன் மூலம் வளிமாசாக்கத்திற்கு எதிராகக் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதையும் இலக்காகக் கொண்டு 'சர்வதேச நீல வானத்திற்கான தூய வளி தின'த்தை வருடந்தோறும் செப்டெம்பர் 7 ஆம் திகதி அனுஷ்டிக்க தீர்மானம் எடுத்தது. 

சுவாசிக்க வளி இல்லாத சூழ்நிலை என்பதை நினைக்கும் போதே பலருக்கும் மூச்சுத் திணறும். திணறும். சுவாசப் பிரச்சினை களால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் அனுபவிக்கும் நரக வேதனைக்கு நிகராக எதனையும் ஒப்பிட முடியாது. நாட்பட்ட நுரையீரல் அடைப்பு  நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் அடையாளம் காணப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் தற்கொலை செய்து கொள்பவர்களின் தொகை ஒரு இலட்சம் பேருக்கு 23.6 ஆக உள்ளதாக பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.இது அதிகளவானோர் தற்கொலை செய்வதற்குக் காரணமான நோய்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. 

அத்துடன் வளி மாசாக்கத்தால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக பனிப் பாறைகள் உருகுவதால் கடல்நீர் பெருகி நிலப் பரப்பிற்குள் பிரவேசிப்பது, வரட்சியால் ஏற்படும் குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக புவி உயிரினங்கள் வாழ முடியாத கோளொன்றாக மாற்றமடையும் அபாயம் உள்ளது.

தூசு,கால்நடைகள் உள்ளடங்கலானவற்றின் சமிபாட்டுக் கழிவுகளிலிருந்து வெளிப்படும் மெதேன் வாயு, காட்டுத் தீயின் போது வெளியேறும் காபனீரொட்சைட், எரிமலைக் குமுறல் போன்றன இயற்கையாக வளியை மாசடையச் செய்யும் காரணிகளாக உள்ளன.அதேசமயம் 18ஆம் நூற்றாண்டில் கைத்தொழில் புரட்சி ஆரம்பமானதைத் தொடர்ந்து தொழிற்சாலைக ளிலிருந்து வெளியேறும் மாசு இரசாயன வாயுக்கள் வளி மாசாக்கத்தில் பெரிதும் பங்களிப்புச் செய்வனவாக மாறின.

தொழிற்றுறையில் கனிம எரிபொருள் பாவனையின் போது வெளிப்படும் அமோனியா, காபனீரொட்சைட், காபனோரொட்சைட், குளோரோபுளோரோ காபன்கள், நைத்திரன் ஒட்சைட்டுகள், கதிர்வீச்சுத் தன்மையுள்ள பொருட்கள், சல்பர் ஒட்சைட்டுகள் என்பன வளிமண்டலத்தில் சேர்கையில் உடல் நலத் திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவனவாக உள்ளன.

 மரணத்திற்கு வித்திடும் அபாயம் 

பொது சுகாதாரத்துக்கான முக்கிய அவசரகால நிலைமையொன்றாக வளிமா சாக்கத்தைப் பட்டியல்படுத்தியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம்,உலக சனத்தொகையில் சுமார் 99 சதவீதத்தினர் மாசடைந்த வளியை சுவாசிப்பதாக கூறுகிறது. 

வளிமாசாக்கமானது சுவாசப்பைக் கோளாறுகள்,சுவாசப்பைப் புற்றுநோய், ஆஸ்துமா, ஒவ்வாமை, இருதய நோய்கள், பாரிச வாதம் போன்ற நோய்களுடன் மன அழுத்தம் போன்ற மன நலப் பிரச்சினைகளும் ஏற்படக் காரணமாகிறது.

வளிமாசாக்கத்தால் காபனீரொட்சைட் போன்ற பச்சை இல்ல வாயுக்களின் தாக்கத்திற்கு உள்ளாகி ஓசோன் படலம் சேதமடைவது சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கக் கூடிய கதிர்கள் நேரடியாக பூமியை வந்தடைவதற்கு வழிவகை செய்கிறது. அந்தக் கதிர்களை மனித உடல் எதிர் கொள்ளும் போது அவை மனிதரின் மரபணுக்களில் பிறழ்வுகளை ஏற்படுத்தி புற்று நோய்கள் ஏற்பட வழிவகை செய்கின்றன. 

கடந்த 2022 ஆம் மேலாகவுள்ள ஓசோன் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அந்தாட்டிக்கா பிராந்தியத்திற்கு மேலாகவுள்ள ஓசோன் துவாரத்தின் அளவு 24.5 மில்லியன் சதுர கிலோமீற்றர் வரை விரிவாக்கமடைந்து காணப்பட்டது. 

அத்துடன் வாகனங்களில் பயன்படுத்தப்படும் கனிம எரிபொருளால் வளி கணிசமான அளவில் பாதிப்பை எதிர்கொள்கிறது.கனிம எரிபொருள் பாவனையால் ஏற்பட்ட வளி மாசாக்கத்தால் மட்டும் வருடாந்தம் 3.61 மில்லியன் பேர் உயிரிழந்து வருகின்றனர்.அத்துடன் வீடுகளில் விறகுகள், கால் நடைகளின் சாணங்கள், மண்ணெண்ணெய் என்பவற்றை பயன்படுத்தி உணவு சமைப்பது, வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் வர்ணப்பூச்சுகள், சுத்திகரிப்பு இரசாயனங்கள் என்பன வீடுகளுக்குள்ளான வளிமாசாக்கத் திற்கு வித்திடுகின்றன. 


உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் பிரகாரம் வீட்டு வளி மாசாக்கத்தால் வருடந்தோறும் சுமார் 3.2 மில்லியன் பேர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களில் சுமார் 2,37,000: பேர் 5 வயதுக்குக் கீழ்ப்பட்ட வயது டைய சிறுவர்களாவர்.அந்த வகையில் மனித மரணங்களுக்கு முக்கிய பங்களிப்புச் செய்து வரும் காரணியொன்றாகவுள்ள வளி மாசாக்கத்தால் ஒவ்வொரு வருடமும் சுமார் 7 மில்லியன் பேர் உயிரிழந்து வருவதுடன் ஒருவரது வாழ்நாள் காலம் 2.9 வருடங்களால் குறைவதாக தெரிவிக்கப்படுகிறது. 

வளியிலுள்ள நச்சுத்தன்மையுள்ள துணிக்கைகள் பாரிசவாதம், சுவாசப் பிரச்சினை, நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் இருதய நோயால் ஏற்படும் மரணங்களில் கால் பங்கிற்கும் காரணமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உலகளாவிய ரீதியில் இடம்பெறும் மரணங்களை தவிர்க்கக் கூடிய பிரதான காரணிகளில் ஒன்றாக விளங்கும் வளி மாசாக்கமானது வருடாந்தம் முன்கூட்டியே இடம்பெறும் 6.7 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாகவுள்ளது. அவற்றில் சுமார் 89 சதவீதமான மரணங்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இடம்பெற்றுள்ளன. அதிகளவு மரணங்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பி டத்தக்கது. 

பறவை இனங்களுக்கும் அச்சுறுத்தல் 

வளிமாசக்கமானது மனிதர்களுக்கு மட் டுமல்லாது பறவை இனங்களின் உயிர் வாழ்க்கை மற்றும் இருப்பு நிலைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மனிதர்களுடன் ஒப்பிடுகையில் பறவைகளின் சுவாச வீதம் அதிகமாக இருப்பதாலும் அவை திறந்த வெளியிலேயே பொழுதைக் கழிப்பதாலும் அவை வளியிலுள்ள துணிக்கைகளை அதிகளவில் உள்வாங்குகின்றன.

வளியில் மாசாக கலக்கும் காபனோரொட்சைட், சல்பர், தொழிற்சாலை தூசு என்பவற்றால் பறவைகள் சுவாசக் கோளாறு, சுகவீனம், நடத்தையில் மாற்றம், கடும் மன அழுத்த நிலை, இனவிருத்தி ஆற்றல் பாதிக்கப்படல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தரை மட்டத்திலான ஓசோன், நைத்திரன் ஒட்சைட்டுகள் என்பன பறவைகளின் நுரையீரலை சேதப்படுத்தக் கூடியனவாகும். நீண்ட காலம் அந்த மாசுக்களை எதிர்கொள்வது பறவைகளில் நுரையீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் அபாயம் மிக்கதாகும். 

வாகனப் புகையில் வெளிவிடப்படும் பொலிசைக்ளிக் அரோமற்றிக் ஐதரோ காபன் நச்சு வாயுத் துணிக்கைகளை நீண்ட காலத்திற்கு எதிர்கொள்வது பறவைகளின் முட்டை உற்பத்தியையும் இனவிருத்தி ஆற்றலையும் பாதிக்கிறது. பறவைகளின் இனவிருத்தி ஆற்றல் குறைவதால் அவை காலப் போக்கில் அழிந்து போகும் அபாயமும் உள்ளது.ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று நீண்ட காலம் வளிமாசாக்கத்தை எதிர்கொள்வது பறவைகளில் உடல் நிறை குறைவை ஏற்படுத்துவதாகத் தெரி விக்கிறது. 

அமிலத்தன்மையுள்ள மாசுக்கள்

வளியில் அமிலத்தன்மையுள்ள மாசுக்கள் சேர்வதால் ஏற்படும் அமில மழையானது உயிரினங்களுக்கு சுவாசப் பிரச்சினைகள், புற்றுநோய் போன்ற உடல் நலப் பாதிப்பு களை ஏற்படுத்துவதுடன் பயிர்ச்செய்கைகளுக்கும் ஊறு விளைவிக்க் கூடியதாகும்.அத்துடன் கட்டிடங்களுக்கும் இந்த அமில மழையால் பாதிப்பு ஏற்படுகிறது.

வளிமாசாக்கத்தால் உலக பொருளாதாரத்திற்கு வருடாந்தம் 5 ட்றில்லியன் டொலர் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வளிமாசாக்கம் காரணமாக இடம்பெறும் காலநிலை மாற்றத்தால் உலகளாவியரீதியில் ஏற்படக் கூடிய வெள்ளம், வரட்சி, சூறாவளிகள், புயல்கள் என்பன காரணமாக விவசாய செய்கைகள், கால்நடை வளர்ப்பு என்பன பாதிக்கப்படுவதால் உலகில் பட் டினி, வறுமை என்பன அதிகரித்து அரிதான வளங்களைப் பெறும் போட்டியில் மோதல் களும் பிணக்குகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

வளி மாசாக்கத்தின் விளைவாக தோற்றமெடுத்த காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளடங்கலான நாடுகள் அண்மையில் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டன.அமெரிக்காவிலும் கனடாவிலும் இத்தாலியிலும் கிரேக்கத்திலும் வரட்சியால் ஏற்பட்ட காட்டுத் தீ பேரழிவுகளை ஏற்படுத்தியி ருந்தன. அத்துடன் அயல் நாடான இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வெள்ள அனர்த்தங்கள் இடம்பெற்றன. பருவகால மாற்றங்களின் போது இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறுவது வழமை என்ற போதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் வழமைக்கு மாறானவையாக நீண்ட காலம் நீடித்து பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்துவனவாக உள்ளன.

வளிமண்டல மாசாக்கம் உள்ளடங்கலான காலநிலை மாற்றப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதை இலக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற உச்சி மாநாடுகள் காலத்திற்குக் காலம் நடத்தப்பட்டு வருகின்ற போதும் ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்புரிமை வகிக்கும் சீனா மற்றும் ரஷ்யாவின் போதிய ஒத்துழைப்பின்மையால் காத்திரமான உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதில் இழுபறி நிலவுகிறது.காலநிலை மாற்றத்திற்குக் காரணமான பச்சை இல்ல வாயு வெளியீடு களுக்கு வழிவகை செய்யும் நிலக்கரியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகள் வரிசையில் முதலிடத்திலுள்ள சீனா உலக நிலக்கரி பாவனையில் 50.5 சதவீதத்தை உபயோ கித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்நாடானது நிலக்கரி பாவனையை குறைப்பதாக அவ்வப்போது கூறி வருகின்ற போதும் காத்திரமான முன்னடியெடுத்து வைக்க பின்வாங்கும் நிலை காணப்படு நிலக்கரியை அதிகளவில் பாவனை ற்படி செய்யும் நாடுகள் பட்டியலில் இலங்கை 59 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வளிமண்டல மாசாக்கமானது தனியொரு பிரச்சினையாக அல்லாது பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் வித்திடும் மாபெரும் பிரச்சினையொன்றாகவுள்ளது.

வளிமண்டல மாசாக்கம் உள்ளடங்கலான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் மனித சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளே இன்று காலநிலை மாற்றப் பிரச்சினையாக உருவெடுத்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுக்கொண்டு பேரழிவுகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளன. இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கத் தவறின் எதிர்காலத்தில் உலகம் மனித உயிர் வாழ்க்கைக்கு உகந்ததற்ற கோளாக மாறும் அபாயம் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.

Post a Comment

Previous Post Next Post