.

றின்னோஸா எழுதிய வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு என்னும் புத்தகமானது ஹிட்லர்,யூதர்கள் மற்றும் ஏனைய இன அழிப்புச் செயற்பாடுகளைப் பற்றிப் பேசுகிறது.இனப்படுகொலை என்றதும் ஏன் ஹிட்லரும் யூதர்களும் நினைவிற்கு வருகிறனர் அவ்வாறு யூதர்களை விட இனப்படுகொலைகளைச் சந்தித்த ஏனைய இனங்கள் தொடர்பாகவும் இனப் படுகொலைகளிற்கு மதங்களின் பங்களிப்பு தொடர்பாகவும் ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

ஏற்கனவே தமிழில் மருதன் அவர்களின் ஹிட்லரின் வதை முகாம்கள் என்ற புத்தகமும் முகிலின் ஹிட்லர் என்ற புத்தகமும் வெளிவந்திருந்தாலும் றின்னோஸா அவற்றையும் கடந்து புதிய தகவல்களைச் சொல்வது சிறப்பு.என்ன அப்படி புதிதாகச் சொல்லி விட்டார்; என்பதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.கிட்டத்தட்ட ஒரு வருட தேடுதலுக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு எழுதிய இந்தப் புத்தகம் ஹிட்லரின் பக்கம் இருந்த நியாயத்தைப் பேசுகிறது.

வரலாற்றின் வெறுப்பு பக்கங்களில் கறுப்பு மையால் எழுதப்பட்ட ஹிட்லரின் சரித்திரத்தில் உள்ள சொல்லப்படாத உண்மைகளையும் மறைக்கப்பட்ட மர்மங்களையும் ஓரளவுக்காவது இந்தப் புத்தகம் பேசுகிறது என்றே சொல்ல வேண்டும்.இந்தப் புத்தகம் கீழ்வரும் முக்கியமான மூன்று கேள்விகளிற்குப் பதில் சொல்கிறது

1.இனவெறுப்பின் ஆரம்பம் என்ன..?
2.கொடுமைகளின் நடுவிலும் மனிதநேயம் எப்படி உயிர் வாழ்ந்தது?
3.எதற்காக அரசியல் மதம் மக்களின் வாழ்வ நரகமாக்கும் கருவிகளாக மாறின..?

யூதரான இயேசுவின் பிறப்பு கத்தோலிக்கத்திற்கு எதிரான மார்டின் லூதரின் கலகம் யூதர்களின் அபரிமிதமான வளர்ச்சி,ஹிட்லரின் எழுச்சி,நாஜிகளின் இன அழிப்பு.இரண்டாம் உலகப்போரின் முடிவு என இந்தப் புத்தகம் இதுவரைச் சொல்லப்படாத வரலாற்றின் இன்னொரு பக்கமாக இருக்கும்.யூத வெறுப்பு எங்கு தொடங்கியது அதற்கு அவர் யூத வரலாற்றை முழுவதும் அலசுவதற்காக என வரலாற்றின் ஆழங்களைச் தேடிச் செல்கிறார் றின்சோனா.


தற்போதைய நவீன வரலாற்று நூல்கள் சொல்வது போல யூதர்களின் ஒரே எதிரி ஹிட்லர்தானா..?6மில்லியன் யூதர்களின் அழிவிற்கு வித்திட்ட ஹோலோகாஸ்ட்டின் பின்னணி என்ன..?ஹோலோகாஸ்ட்டுக்கு இட்டுச் சென்றது ஹிட்லரின் யூத எதிர்ப்பு மட்டும்தானா..?இதன் வேர் எங்கிருந்து தொடங்கியது என்பதை தெளிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.

ஏனைய இனங்களிடம் இல்லாத ஆனால் யூதர்களிடம் காணப்படும் முக்கியமான ஒரு பண்பு ஒற்றுமை.உலகின் எந்தவொரு மூலையிலும் யூதனுக்கு ஒரு பிரச்சனையென்றால் ஒட்டுமொத்த யூதச் சமூகமுமே திரண்டு வந்து தனது ஆதரவைத் தெரிவிக்கும்.அவ்வாறான பண்புதான் அவர்களிற்கென்று ஒரு நாட்டை உருவாக்கி இன்று வரை கட்டிக் காக்கும் இரகசியமும் ஆகும்.

ஐரோப்பாவில் யூதர்களின் பாரம்பரியப் பயணம் எவ்வாறு அமைந்தது என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.1492 ம் ஆண்டு ஸ்பெயினில் அரசரால் பிறப்பிக்கப்பட்ட அல்ஹம்பரா கட்டளை தொடக்கம் ஹிட்லரின் கட்டளைகள் வரை யூத வெறுப்பு மற்றும் பாரம்பரிய அடக்குமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதையும் ஐரோப்பாவில் யூதர்கள் எவ்வாறு சமூக பொருளாதார ஆதிக்கம் செலுத்தினர் என்பதையும் விளக்குகிறது இந்தப் புத்தகம்.

யார் இந்தக் ஹிட்லர்..?ஏன் அவர் யூதர்களை வெறுத்தார்..?யூதர்களை முற்றிலுமாக கருவறுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்போது அவர் மனதில் உருவானது?மனித  நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு காலம் காலமாக யூத எதிர்ப்பு இருந்து வந்தாலும் ஏன் ஹிட்லரை மட்டும் தனித்து பிரித்து ஒரு கொடூரமான வில்லனாகச் சித்தரிக்க வேண்டும்..?வரலாற்றில் கொடுங் கோலனாகச் சித்தரிக்கப்பட்டாலும் இன்றுவரை ஹிட்லரை கதாநாயகனாகக் கொண்டாடும் ஒரு கூட்டமும் இருப்பதன் பின்னணி என்ன..?ஹிட்லர் நல்லவரா கெட்டவரா என்பதற்கான விடைகளைத் தேடுகிறது இந்தப் புத்தகம்.

நாஜி வதை முகாம்கள் எத்தகையவை.வதை முகாம்கள் நாஜிக்களின் கண்டுபிடிப்பல்ல.உலகின் முதல் வதை முகாம் ஜேர்மனியில் உருவாகவும் இல்லை.அவை முதன்முதலில் உருவான இடம் வரை இந்நூல் பேசுகிறது.நாஜி முகாம்கள் வதை முகாம்கள் மரண முகாம்கள்,வேலை முகாம்கள் இனச் சுத்திகரிப்பு முகாம்கள் தடுப்பு முகாம்கள் போர்க் கைதிகள் முகாம்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன.நாஜிக்களின் அடிப்படைக் கொள்கை இரண்டே இரண்டுதான் ஜேர்மானியச் சமூகத்தில் யூதனுக்கு இடமில்லை இரண்டாவது வாழ்வதற்கு தகுதியற்ற உயிர்கள் நீடிப்பதில் அர்த்தமில்லை.இந்த இரண்டினதும் விளைவு அரசு இயந்திரம் முழு மூச்சாக இயக்கப்பட்டு யூதர்கள் வேரறுக்கப்பட்டார்கள்.

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வதைமுகாம் பற்றிய வர்ணனைகள் நிச்சயம் மனிதனாகப் பிறந்ததற்கே வெட்கப்பட வைக்க கூடியவை. மனிதர்கள் இவ்வளவு கொடூரமானவர்களா என்று எண்ண வைக்கும் அளவிற்கு மோசமானவை.ஹிட்லரின் வதை முகாம்கள் என்ற புத்தகத்திலும் இந்த மாதிரியான வர்ணனைகள் இடம்பெற்றுள்ளன.அதிகாரமும் இனவெறியும் மக்களை எப்படியெல்லாம் மாற்றுகின்றன என்பதை இந்த வதைமுகாம்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹிட்லர் என்ன செய்திருக்க வேண்டும் என்று றின்னோஸா தன்னுடைய பார்வை முன்வைக்கிறார்.அதாவது செல்வத்திலும் அதிகாரத்திலும் மமதையிலும் திளைத்திருந்த யூதர்களை ஒடுக்கி நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்கிறார்.ஒட்டுமொத்த யூத இனத்தின் மீதான வன்முறையாக மாற்றியதுதான் ஹிட்லர் செய்த தவறு.யூதர்களின் கொட்டத்தை ஜனநாயக முறையில் அடக்காமல் அவர்களை கொடூரமாக அழித்ததுதான் ஹிட்லருக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தியது.மாறாக யூத இனத்தைக் குறி வைக்காமல் யூத செல்வந்தர்களின் செல்வாக்குகளையும் அவர்களது அடாவடிகளையும் அரசியல் ரீதியாக கட்டுப்படுத்தியிருந்தால் ஹிட்லர் புகழின் உச்சிக்கே சென்றிருப்பார்  என்கிறார் றின்னோஸா.

ஹிட்லர் பற்றியும் யூதர்கள் பற்றியும் நாஜிகள் பற்றியும் நாஜி அதிகாரிகள் பற்றியும் வதைமுகாம்கள் பற்றியும்  அவை சொல்லும் கதைகள் பற்றியுமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டேதான் செல்கிறன.இதற்கு முடிவு என்பது இருக்கவே இருக்காது.காரணம் வரலாறு என்பது பொய் கலந்த உண்மை-உண்மை கலந்த பொய்.இதில் பல வல்லரசுகளின் அரசியல் லாபம் கலந்திருக்கிறது.எனவே இது பற்றிய தீர்க்கமான முடிவோ சரியான தெளிவோ எப்போதும் யாருக்கும்  கிடைக்கப் போவது இல்லை.ஆனாலும் ஆராய்ச்சிகள் தொடரவே செய்யும்.

மனிதன் என்பவனுக்கு மனிதாபிமானம் முதன்மையானது.வேறு எதன் மீதாவது உள்ள அபிமானம் அதையும் மீறி எழுந்திடுமானால் மனிதனென்ற தகுதியை அவன் இழந்திடுவான்.அது சுய அபிமானம் குடும்ப அபிமானம் இன அபிமானம் தேச அபிமானம் என்று எந்த அபிப்பிராயமாக இருந்தாலும் சரி. ஹிட்லரின் தேசாபிமானம் வளர்ந்து பின் இது இன அபிமானமாக மாறி அவரது சுய அபிமானத்தை மீறச் செய்துவிட்டது.கொடூரமாக நடந்த 60 இலட்சம் கொலைகள் மனித உரிமை மீறல்கள் எல்லாமே ஹிட்லரை நிச்சயம் மன்னிக்க முடியாத குற்றவாளியாக்கி விடுகிறன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,இருக்கவும் முடியாது.நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்றால் உங்கள் பாவங்கள் கழுவப்பட்டு புனிதர் ஆக்கப்படுவீர்கள்.தோற்றால் புனிதனும் பாவியாவான்.

மோசஸ் காலத்திலிருந்து இயேசு காலத்திலிருந்து ஹிட்லர் காலம் வரை யூதர்களிற்கு பெரும்பாலும் உதவி கிடைக்கவில்லை.சாமானியர்களிடமிருந்து தெறித்து விழுந்த வெறுப்புத் துளிகளிற்கு பலியான யூதர்கள் கணிசமானவர்கள்.யூதர்கள் வழிபட்ட தேவாலயங்களால் ஹிட்லரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.கடவுள் பக்தி மிக்க கைதிகளைக் கூட கடவுள் காப்பாற்றவில்லை.இறக்கை முளைத்த தேவதைகள் வானத்திலிருந்து பறந்து வந்து நீதியையும் நியாயத்தையும் நிலை நாட்டி விடவில்லை.எப்போது பேசி இருக்க வேண்டுமோ அப்போது எல்லாம் மதமும் கடவுளும் அமைதி காத்து நிற்கிறது.

மொத்தத்தில் இந்தப் புத்தகமானது வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புவர்களிறகும் வரலாற்றை வேறு கோணத்தில் பார்க்க விரும்புவர்களிற்கும் நல்ல விருந்தாக அமைந்துள்ளது.வாசிப்போம்.




Post a Comment

Previous Post Next Post