.

கறையான்கள் ஒன்று சேர்ந்து பல நாட்கள் உழைத்து ஒரு நல்ல வீட்டைக் கட்டி முடித்தன. அந்த வீட்டுக்கு பல வாயில்கள் அமைத்தன. கோபுரம் போன்றிருந்த அந்த வீட்டின் வாயில்கள் வானை நோக்கி அங்காத்திருந்தன. சில வாயில்கள் நிலத்திலும் அமைந்திருந்தன. வீட்டினுள்ளே சிறியதும், பெரியதுமான பல அறைகள் இருந்தன. 

கறையான்கள் அந்த வீட்டில் வாழ்ந்தன. முட்டையிட்டன. குஞ்சு பொரித்தன. இவ்வாறு சில கறையான்கள் பரவலாகப் பெருகின. வேலை செய்யாமல் நீண்ட நாட்கள் உண்டு கொழுத்த கறையான்கள் பலவற்றிற்குச் சிறகுகள் முளைத்தன. அவை ஈசல்கள் என அழைக்கப்பட்டன. அந்தச் சிறகு முளைத்த கறையான்கள் தம்மை ஆள்பவராக நினைத்தன. சிறகு முளைக்காத கறையான்களை அடிமைகளாக நடத்தின. ஈசல்கள் கறையான்களிடம் வேலை வாங்கின. அவை உழைக்காது உண்டு மேலும் கொழுத்தன. துன்பப்பட்ட கறையான்கள் கிளர்ந்தெழுந்தன.

“நீங்களும் நாங்களும் ஒரே இனம். சிறகு முளைத்துவிட்டால் நீங்கள் பெரியவர்களா?” என்று கேட்டன. 

"இதைக் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் அடிமைகள். சொன்னதைச் செய்யுங்கள்" என்று ஈசல்கள் கறையான்களை அடக்கின. உரிமை கேட்ட கறையான்கள் நாள்தோறும் ஈசல்களால் கடித்துக் குதறப்பட்டன.

 "நீங்கள் செய்வது அநியாயம்" என்று வாதாடிய கறை யான்களை ஈசல்கள் பாய்ந்து பாய்ந்து தாக்கின. 

"உங்களைப் போல நாங்கள் அற்ப கறையான்களல்ல. நாங்கள் உங்களைவிட எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள். சிறகு முளைத்தவர்கள்" என்று பெருமை பேசின. 

"அப்படியானால் நல்லது. நீங்கள் உயர்ந்தவர்களாகவே இருங்கள். நாங்கள் போய் வேறு வீடு கட்டிக்கொள்கிறோம்" என்று கூறிய கறையான்கள் அந்த புற்றைவிட்டுப் புறப்பட்டன. 

"நீங்கள் போவதா? எங்களை விட்டா? அது நடவாது. நீங்கள் அடிமைகள். காலம் முழுக்க எங்களுக்கு அடங்கிக் கிடந்து உழைக்க வேண்டியவர்கள்" என்று கூறிய ஈசல்கள் கறையான்களைத் தடுத்துத் தாக்கத் தொடங்கின. கொழுத்த ஈசல்களின் தாக்குதலுக்கு இலக்கான கறையான்கள் பல துடி துடித்து இறந்தன.

 "நாங்கள் போய்விட்டால் உங்களால் வாழ முடியாது. நாங்கள் போய்விட்டால் உங்களால் உணவு தேட முடியாது. அதுதான் எங்களைப் போகவிடாமல் தடுக்கின்றீர்கள். தன்மானமிருந்தால் எங்களை விட்டுவிட்டு நீங்கள் வாழுங்கள். வாழ்ந்து பாருங்கள்'' என்று எதிர்த்துப் பேசிய கறையான்களை ஈசல்கள் கடித்துக்குதறி இழுத்து நிலத்தில் தள்ளி ஏறி மிதித்தன.

இவ்வாறு அந்த வீட்டில் வாழவும் முடியாது, ஓடிப்போகவும் முடியாது கறையான்கள் பட்ட துன்பம் சொல்லில் அடங்காது. தன்மானமுள்ள கறையான்கள் எதிர்த்து நின்று செத்து மடிந்தன. எஞ்சிய கறையான்கள் அடங்கியொடுங்கி அடிமைகளாக உழைத்தன. 

ஈசல்களோ அப்பாவிக் கறையான்களின் உழைப்பை உண்டு கொழுத்துக் கிடந்தன. உல்லாச உலா வந்தன. காலம் ஓடியது. கோடை முடிந்தது. மாரி மலர்ந்தது. தலை மழை கண்ட விவசாயி வயலுக்கு வந்தான். வரம்பு கொத்தி மண் வைக்கத் தொடங்கினான். வயல் வெளியில் நான்கு வரம்புகளின் சந்திப்பில் கோபுரம் போல எழுந்து நின்ற புற்றினைக் கண்டான். 

'அடடா! எப்போது இந்தப் புற்று எழுந்தது ?' என்று வியந்தான். 'எத்தனைப் பாம்புகள் இந்தப் புற்றில் இருக்குமோ?' என்று பயந்தான். அடுத்த கணம் மழைபெய்து இளகிப் போயிருந்த அந்தப் புற்றை அவனது கூரிய மண்வெட்டி பதம் பார்த்தது. 

தமது வீடு சிதைபடுவதை உணர்ந்த அடிமைக் கறையான்கள் அந்த வீட்டின் நிலவறைகளில் ஓடி ஓடி ஒளிந்தன. இதைக் கண்ட ஈசல்கள் "பயந்தாங் கொள்ளிகளே" என்று பரிகசித்தன. "நீங்கள் ஓடி நிலவறைகளில் பதுங்கிக்கொண்டால் தப்பி விடுவீர்களா? அந்த கூரிய மண்வெட்டி நிலவறைகளையும் தகர்த்துப் பாயும்" என்று சிரித்த ஈசல்கள், சிறகுகளை அசைத்த வண்ணம் எழுந்தன.



 "கறையான்களே நீங்கள் அழிந்துபோக வேண்டியதுதான். சிறகுகள் இருந்தால் எங்களைப்போல பறந்து தப்பிக்கொள்ளலாமே! பாவம் என்ன செய்வீர்கள்? இப்போது சொல்லுங்கள் யார் உயர்ந்தவர்கள்? நாங்களா நீங்களா? இதோ பாருங்கள் நாங்கள் பறக்கிறோம்! உயர உயரப் பறக்கிறோம்" என்று ஆரவாரித்தவாறே ஈசல்கள் எல்லாம் பறக்க ஆரம்பித்தன. 

இருண்டு வந்த மழை சோவெனப் பொழிய ஆரம்பித்தது. விவசாயி மண்வெட்டியைத் தூக்கியவாறே வீட்டை நோக்கி ஓடினான். 

பறந்த ஈசல்கள் மழையிற்பட்டு சிறகொடிந்து வீழ்ந்தன. எஞ்சிய ஈசல்களைப் பருந்தும், குருவிகளும் கவ்வி விழுங்கின. சிறகொடிந்து நிலத்தில் வீழ்ந்து நகர்ந்த ஈசல்கள் கொக்குகளுக்கும் கோழிகளுக்கும் இரையாகின. 

மழை ஓய்ந்தது 

இருள் கலைந்தது 

ஒளி பிறந்தது 

அந்தக் கறையான்கள் புதிய இடத்தில் புதிய கோபுரத்தை கட்டிக் கொண்டிருந்தன. 


உழைப்பு

உழைப்பு

அதுதான்

புதுமையின் பிறப்பு

 என்று அவை பாடிக் கொண்டிருந்தன. 

Post a Comment

Previous Post Next Post