.

ஓர் ஊரில் பெருஞ்செல்வன் ஒருவன் இருந்தான். அந்த ஊரிலிருந்த பெரும்பாலான நிலங்கள் அவனுக்கே சொந்தமாக இருந்தன. 

பேராசை கொண்டிருந்த அவன் ஏழை மக்களுக்கு அதிக வட்டிக்குப் பணம் கொடுத்தான். பணம் திருப்பித்தரஇயலாதவர்களின் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டான். தன் நிலங்களில் அவர்களை அடிமை போல வேலை வாங்கினான்.

அவனை வரவேற்ற அவனது கொடுமைகளுக்கு அளவே இல்லாமல் போயிற்று. 

ஊர் மக்கள் எல்லோரும் இவனுக்குச் சாவு வராதா என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள். 

அந்த ஊருக்குத் தன் கழுதையில் அமர்ந்து ஈஃபண்டி வந்தான். 

ஏழைகளுக்கு உதவுபவன்; அவர்கள் துன்பத்தை நீக்குபவன்; நல்ல உள்ளம் கொண்டவன் ஈஃபண்டி; இப்படி அவனைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தார்கள், அந்த ஊர் மக்கள். 

அவனை வரவேற்ற அவர்கள் அந்தச் செல்வனின் கொடுமைகளைப் பற்றிச் சொன்னார்கள். 'நீங்கள்தான் அவனுக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று வேண்டினார்கள்.

சிந்தனையில் ஆழ்ந்த அவன் “அந்தச் செல்வன் எதற்கு எல்லாம் ஆசைப்படுவான்? அதைச் சொல்லுங்கள்” என்று கேட்டான். 


"அவனது ஆசைக்கு அளவே இல்லை. பேராசை பிடித்த அரக்கன் அவன். எவ்வளவு கிடைத்தாலும் அவன் மகிழ்ச்சி அடைய மாட்டான்” என்றான் அவர்களில் ஒருவன்.

'அது போதும் எனக்கு. பேராசை கொண்ட ஒருவனை ஏமாற்றுவது எளிது. உங்களில் பலரிடம் சிறிதளவு தங்கம் இருக்கும். எல்லாவற்றையும் திரட்டுங்கள். அவற்றை என்னிடம் கொடுங்கள். அந்தத் தங்கத்தை வைத்துத்தான் அவனை மடக்க வேண்டும்” என்றான் அவன். 

தங்களிடம் இருந்த தங்கத்தை எல்லாம் அவர்கள் திரட்டினார்கள். அவற்றை அவனிடம் கொடுத்தார்கள்.

மறுநாள் காலையில் வழக்கம் போல அந்தச் செல்வன் தன் நிலங்களைப் பார்வையிட வந்தான். 

வழியில் ஒரு மரத்தின் நிழலில் ஈஃபண்டி அமர்ந்திருந்தான். சல்லடையில் எதையோ அவன் சலித்துக் கொண்டிருந்தான். சல்லடையிலிருந்த சிறு சிறு பொருள்கள் பளபளத்தன. 

வியப்பு அடைந்த செல்வன் "டேய்! இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று அதட்டினான்.

 "ஐயா! நான் என்ன செய்கிறேன் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? நிலத்தில் விதைப்பதற்காகப் பொன்னைச்  சலித்துக் கொண்டிருக்கிறேன்.அவற்றில் பெரிய விதைகளை எடுத்து நிலத்தில் விதைப்பேன்” என்றான் ஈஃபண்டி,

வியப்பு அடைந்த அவன் “உண்மையைச் சொல். இப்படி விதைத்தால் பொன் விளையுமா?” என்று கேட்டான். 

"என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? இன்று நான் பத்து கிராம் பொன்னை இங்கே விதைக்கப் போகிறேன். அடுத்த வாரத்தில் நூறு கிராம் பொன் எனக்குக் கிடைக்கும்" என்றான் ஈஃபண்டி. அவன் பேச்சில் உறுதி தெரிந்தது.

 "நான் இன்னும் பெருஞ்செல்வனாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அதனால்தான் இவனை இங்கு அனுப்பி இருக்கிறார்” என்று உள்ளுக்குள் மகிழ்ந்தான் அந்தச் செல்வன். 

"நான் உன்னை நம்புகிறேன். நாம் இருவரும் சேர்ந்தே செயல்படுவோம். நிலம் என்னுடையது. பொன் உன்னுடையது. பொன் அறுவடையானதும் அதில் எட்டுப் பங்கை என்னிடம் தர வேண்டும். மீதி இரண்டு பங்கை நீ எடுத்துக் கொள்ள வேண்டும். நிலத்தின் சொந்தக்காரனுக்கு அதிகப் பங்கு. இது உனக்கே தெரியும்”.  

"நீங்கள் சொல்வது சரிதான். பத்து கிராம் பொன்னை விதைத்தால் எனக்கு இருபது கிராம் பொன் கிடைக்கும். எப்படியும் இரண்டு பங்கு பொன் கிடைக்கிறது. எனக்கு அது போதும்" என்றான் ஈஃபண்டி. 

வெறும் பேச்சால் என்ன பயன்? இவன் ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது என்று சிந்தித்தான் செல்வன். 

சாட்சி வைத்து இவனிடம் எழுதி வாங்கிக்கொள்வது என்ற முடிவுக்கு வந்தான்.

அந்த ஊர் நீதிபதியை அங்கு அழைத்து வந்தான். 

அவர் முன்னிலையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஈஃபண்டி பொன்னை விதைக்கலாம். அறுவடை முடிந்ததும் எட்டுப் பங்கு பொன்னைச் செல்வனிடம் கொடுத்துவிட வேண்டும் என்று இருவரும் ஒப்புக் கொண்டார்கள்.

மகிழ்ச்சியாக அங்கிருந்து சென்றான் செல்வன். 

ஒரு வாரம் கழிந்தது.

என் செல்வனின் மாளிகைக்கு வந்தான் ஈஃபண்டி. எண்பது கிராம் பொன்னை செல்வனிடம் கொடுத்தான். 

“உங்கள் பங்குப் பொன். எண்பது கிராம் இருக்கிறதா? எடை போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றான். 

அவன் தந்த பொன் கட்டிகளை உற்றுப் பார்த்தான் செல்வன். உரைகல்லில் வைத்துத் தேய்த்துப் பார்த்தான். எந்த ஏமாற்று வேலையும் இல்லை. எல்லாம் சொக்கத் தங்கம் என்பது அவனுக்கு புரிந்தது. மகிழ்ச்சியில் திளைத்த அவனால் ஏதும் பேச முடியவில்லை. 

“நான் வருகிறேன்” என்று புறப்பட்டான் ஈஃபண்டி. உணர்வு வரப் பெற்ற அவன் "உன்னைப் போன்ற திறமைசாலியை நான் பார்த்ததே இல்லை. பொன்னை விதைக்கும் கலையைத் தெரிந்து  வைத்திருக்கிறாய். உன்னிடம் உள்ள இருபது கிராம் தங்கத்துடன் இந்த எண்பது கிராம் தங்கத்தையும் சேர்த்து விதை. அடுத்த வாரம் எண்ணூறு கிராம் தங்கம் தர வேண்டும். என்னை ஏமாற்றிவிடாதே” என்றான்.


 
“என் மதிப்பிற்கு உரியவர் நீங்கள். உங்களை நான் ஏமாற்றுவேனா? அறுவடை முடிந்ததும் உங்களிடம் எண்ணூறு கிராம் தங்கம் இருக்கும். ஒரு கிராம் குறையாது" என்ற ஈஃபண்டி அங்கிருந்து புறப்பட்டான். 

அடுத்த வாரம் எண்ணூறு கிராம் தங்கத்தை அவனிடம் கொடுத்தான் ஈஃபண்டி.

அதைப் பார்த்து "நீ ஏன் நிறைய பொன்களை விதைக்கக் கூடாது? அறுவடை முடிந்ததும் ஏராளமான பொன் கிடைக்காதா?" என்று கேட்டான்.

 "எனக்கும் அப்படி விதைக்க ஆசைதான். அவ்வளவு பொன்னிற்கு நான் எங்கே போவேன்? நிறைய பொன் என்னிடம் கிடைத்தால் போதும். மலை போலப் பொன்னை அறுவடை செய்வேன்” என்றான் ஈஃபண்டி.

பேராசை கொண்ட அவன் “உனக்கு நான் நிறைய பொன் தருகிறேன்” என்றான். 

தான் சேர்த்து வைத்திருந்த செல்வத்தை எல்லாம் திரட்டினான் அவன். இரண்டு பெட்டி நிறைய தங்கம் சேர்ந்தது. அந்தப் பெட்டிகளை ஈஃபண்டியிடம் கொடுத்தான்.

“என் வாழ்நாள் முழுமையும் பாடுபட்டுச் சேர்த்த தங்கம் இது. அடுத்த வாரம் இதே போல பதினாறு பெட்டித் தங்கம் வர வேண்டும். அதில் சிறிதும் குறையக் கூடாது” என்றான்.

அந்தப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான் ஈஃபண்டி. அடுத்த வாரம் வந்தது. 

தலை கவிழ்ந்தபடி அந்தச் செல்வனின் வீட்டிற்கு வந்தான் ஈஃபண்டி. 

அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் செல்வன்.

 “சொன்னது போலவே வந்து விட்டாயே கழுதைகளின் மேல் ஏற்றப்பட்ட தங்கப் பெட்டிகள் மாளிகைக்கு வெளியே நிற்கின்றனவா? நான் அவற்றைப் பார்க்க வேண்டும். வா” என்றான்.

 "ஐயா! நான் என்ன செய்வேன்? எல்லாத் தங்கமும் போய்விட்டது" என்று அழுதான் அவன். 

அதிர்ச்சி அடைந்த செல்வன் ‘என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன்? பார்' என்று கோபத்துடன் கத்தினான். 

“ஐயா! நான் எந்த நேரத்தில் பொன்னை நட்டேனோ தெரியவில்லை. பொன் செடிகள் அனைத்தும் வெயிலில் கருகி விட்டன. உங்கள் தங்கம் போனது போலவே என் தங்கமும் போய்விட்டது. என்ன செய்வேன்?” என்று அழுது புலம்பினான் அவன். 

கோபத்தின் உச்சிக்கே சென்றான் செல்வன். 

"பொய்யனே! எங்காவது நிலத்தில் பொன் விளையுமா? பொன் செடிகள் காய்ந்து கருகிவிட்டதாக யாரை  ஏமாற்ற பார்க்கிறாய்?” என்று கத்தினான். 

என் பேச்சை நீங்கள் நம்பவில்லை. நாம் ஒப்பந்தம் செய்த போது சாட்சியாக இருந்த நீதிபதியை இங்கே அழையுங்கள். அவர் என்ன தீர்ப்பு தருகிறாரோ அதை ஏற்றுக் கொள்வோம்” என்றான் அவன்.

நீதிபதியின் வீட்டிற்குச் சென்ற செல்வன் அவரை அழைத்து வந்தான். 

 இருவரையும் பார்த்து 'யார் பொய் சொன்னாலும் எனக்குப் பிடிக்காது. கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று கண்டிப்புடன் சொன்னார்.

அவரைப் பார்த்து  ஈஃபண்டி “நீதிபதி அவர்களே! நீங்கள்தான் நாங்கள் ஒப்பந்தம் செய்த போது சாட்சியாக இருந்தீர்கள். நிலத்தில் பொன் விளையும் என்பதை இப்பொழுது நம்பவில்லை என்கிறார். நம்பாவிட்டால் இவர் என்னிடமிருந்து எண்பது கிராம் பொன்னை ஏன் பெற்றுக் கொண்டார்? இரண்டாம் முறையாக எண்ணூறு கிராம் பொன்னையும் எப்படிப் பெற்றுக் கொண்டார்? 

ஒரு வாரமாக மழை இல்லை. பொன் காய்க்கும் செடிகள் அனைத்தும் கருகிவிட்டன. இவர் என்னிடம் தந்த பொன்னும் மண்ணோடு மண்ணாகிவிட்டது. இதைச் சொன்னாலும் நம்ப மறுக்கிறார். நான் ஏமாற்றிவிட்டேன் என்கிறார். நீங்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்" என்று பணிவுடன் சொன்னான்.

செல்வனைப் பார்த்தார் அந்த நீதிபதி. ஏதும் பேசாமல் அமைதியாக நின்றான் அவன். 

வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” என்ற அவர் அங்கிருந்து சென்றார். 

'ஐயோ! இப்படி ஏமாந்துவிட்டேனே' என்று வருந்தினான் செல்வன். 

ஊர் மக்களை எல்லாம் அழைத்தான் ஈஃபண்டி. அவர்கள் தந்த பொன்னைப் போலப் பத்துப் பங்கு திருப்பிக் கொடுத்தான். மீதியிருந்த பொன்னை மற்றவர்களிடம் கொடுத்தான்.

 'இனி அந்தச் செல்வனின் கொடுமை இருக்காது. மகிழ்ச்சியாக வாழுங்கள்” என்று தன் கழுதையில் அமர்ந்து கொண்டான். எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவனை வழியனுப்பி வைத்தார்கள். 

Post a Comment

Previous Post Next Post