.





சுந்தரம் தானென்ற அகம்பாவம் பிடித்தவன். தான் நினைப்பதே சரியென எண்ணிச் செயல்படுபவன். பெரியோர்கள் அறிவுரைகள் கூறினாலும் அவன் ஏற்பவனல்ல. அவனது இந்தப் போக்கு அவனது தந்தை சபாபதிக்கு மிகுந்த வேதனையை அளித்தது. 

சபாபதி நல்லவன்.அறிவாளி. ஆயினும் அவனும் தான் என்ற அகம் பாவம் கொண்டவனே. எனவே ஊரார் அப்பனைப் போலத்தான் பிள்ளை என்ற கூறலாயினர். சபாபதியும் ''நான் அகம்பாவம் கொண்டவன் என்றாலும் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பவன். தந்தையை பக்தி சிரத்தையுடன் மதித்து வந்ததால்தான் இவ்வளவுக்கு உயர முடிந்தது. என்னைப் போல என் மகனும் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்” என எல்லோரிடமும் கூறி வரலானான்.

சுந்தரம் ஒருவரது அனுபவம் கண்டு பாடம் கற்றுக் கொள்பவனல்ல. எதையும் தானே பரீட்சித்து சரி பார்க்க வேண்டுமெனப் பிடிவாதம் பிடிப்பவன். சிறு வயதில் நெருப்பு சுடுமென பலர் அவனை எச்சரித்த போதிலும் அதனைத் தொட்டுப் பார்த் துக் கையை சுட்டுக் கொண்டான். இளைஞனான போது ஊரில் ஏரியில் முதலை உள்ளது எனப் பலர் எச்சரித் தும் அதைக் கேளாமல் அவன் ஏரியில் குதித்து முதலையின் பிடியிலிருந்து சிரமப்பட்டுத் தப்பி கரைக்கு வந்தவன். 

ஆனால் சுந்தரத்தின் அகம்பாவத்தால் ஓரிரு நன்மைகள் ஏற்பட்டன. அவ்வூரில் ஆண்டாளு என்ற பணக்கார விதவை ஒரு பெரிய வீட்டில் வசித்து வந்தாள். அவள் திடீரென இறந்து போகவே அவளது வாரிசுதாரரான உறவினர் அந்த வீட்டை விற்க முயன்றார். ஆனால் அந்த வீட்டில் ஆண்டாளின் ஆவி உலாவுவதாக ஒரு வதந்தி கிளம்பவே அதை மிகக் குறைந்த விலைக்குக் கொடுப்பதாக அந்த உறவினர்கூறினார். அப்போதும் அதை வாங்க யாரும் முன் வரவில்லை.

சுந்தரம் மலிவாக வரும் அந்த வீட்டை வாங்கலாமெனத்தன் தந்தையிடம் கூறினான். ஆனால் சபாபதி அதற்கு இணங்கவில்லை. சுந்தரம் அந்த வீட்டில் ஆவி எதுவும் உலாவவில்லை என்று தான் நிரூபிப்பதாகக் கூறி மூன்று இரவுகள் தனியாக அந்த வீட்டில் படுத்துத் தூங்கி விட்டு வந்தான். இதனால் சபாபதி திருப்தி அடைந்து அந்த வீட்டை விலைக்கு வாங்கி விட்டான்.

தன் மகனால் நன்மை ஏற்பட்டதென்று சபாபதி மகிழ்ந்தாலும் சுந்தரம் தன் பேச்சைக் கேட்டு நடப்ப தில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டான். சபாபதிக்குப் பத்து ஏக்கர் நிலம் இருந்தது. அதில் நன்கு பாடுபட்டால் நிறையப் பணம் கிடைத்து மேலும் பத்து ஏக்கர் நிலத்தை வாங்கி விடலாமே என்று சபாபதி நினைத்தான்.

ஆனால் சுந்தரமோ விவசாயத்தில் மிகவும் பாடுபட வேண்டுமென்றும்  வியாபாரத்தில் இறங்கினால் அதிகம் பாடுபடாமல் நிறையப்பணம் சம்பா திக்கலாமே என்றும் தன் தந்தையிடம் கூறினான். தந்தை கொஞ்சம் நிலத்தை விற்றுப் பணம் கொடுத்தால் அதை முதலாக வைத்துக் கொண்டு லட்சம் லட்சமாகச் சம்பாதித்து காட்டுவதாகக் கூறினான். சபாபதியோ "வியாபாரம் நமக்கு சரிப்படாது. அதற்கு சாமர்த்தியம் வேண்டும் பேச்சு, பொய், புரட்டு என் றெல்லாம் வேண்டும். இவை இருந்தாலே வியாபாரத்தில் முன்னேற முடியும். விவசாயத்தில் நீ என் அனுபவங்களைத் தெரிந்து கொண்டு செயல்படலாமே” என்றான். 



அது கேட்டு சுந்தரம் சிரித்து 'நான் வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்கிறேன். வியாபாரம் செய்து முன்னுக்கு வந்து காட்டுகிறேன். எனக்கு விவசாயமும் வேண்டாம். அதில் உங்களது அனுபவங்களையும் கேட்டு நான் தெரிந்து கொள்ள மாட்டேன்” என்று கூறினான். சுந்தரத்திற்குத் தாயின் பக்க பலம் இருந்தது. அவன் தன் தந்தை கூறியதை லட்சியம் செய்யவில்லை. இதனால் சபாபதியின் மனம் வேதனைப் பட்டது. அவன் தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. மேலும் பத்து ஏகர் நிலம் வாங்க அவன் பணம் சேர்த்து வைத்திருந்தான். அதை சுந்தரத்திடம் கொடுத்து “இதை என்ன வேண்டு மானாலும் செய்து கொள்'' என்று கூறினான்.

சுந்தரம் அதை முதலாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து கொஞ்ச நாட்களிலேயே முதலை மூன்று மடங் காக்கிக் காட்டினான். அதைக் கண்டு சபாபதி மகிழ்ந்து ‘நீ சாமர்த்தியசாலியே. உன் திறமையைக் குறைவாக மதிப்பிட்டு விட்டேன். நீ விரும்பினால் என் நிலத்தை விற்று அந்த முத லுடன் உன் வியாபாரத்தில் கூட்டு சேர்கிறேன்” என்றான். ஆனால் சுந்தரம் அதற்கு சம்மதிக்காமல் “பணம் என்றதும் எல்லாம் காற்றில் பறந்து விடுமா? நீங்கள்தானேவியாபாரத்தில் பொய்  புரட்டு, மோசடி என்றெல்லாம் இருக் கும், அதைச் செய்யக் கூடாது என்று எனக்கு அறிவுரை கூறினீர்கள். நான் அனுபவ ரீதியாக அவை வியாபாரத்தில் உள்ளன என்று தெரிந்து கொண்டேன். இம் முறை இவை இல்லாமல் நேர்மையாய் வியாபாரம் செய்யப் போகிறேன். அப்போதும் முன்போல லாபம் கிடைத்தால் தொடர்ந்து வியாபாரம் செய்வேன். அப்படிக் கிடைக்கா விட்டால் வியாபாரத்திற் குத் தலை முழுக்கு போட்டு விடு கிறேன். அதுவரை யாரையும் என் வியாபாரத்தில் கூட்டு சேர்த்துக் கொள்ள மாட்டேன்” என்றான்.

தன் பால் கொஞ்சமும் பாசம் தன் மகனுக்கு இல்லையே என எண்ணி சபாபதி மனம் புழுங்கினான். ஒரு வருடம் கழிந்தது. சுந்தரம் தன் வியாபாரத்தில் பணத்தை எல்லாம் இழந்து விட்டான். அதனால் வியாபாரத்தை விட்டு விவசாயம் செய்யத் தீர்மானித்தான். அது கண்டு சபாபதி மகிழ்ந்து போனான். ஆனால் சுந்தரம் தன் தந்தை செய்யும் முறையில் விவசாயம் செய்யப் போவதில்லை எனக் கூறி நெல் விளையும் நிலத்தில் புகையிலையைப் பயிர் செய்யப் போவதாகக் கூறினான். மாமரங்களை வெட்டி விட்டு. தென்னங்கன்றுகளை நடுவானாம். சபாபதியோ 'இப்போதுள்ள நம் நிலத்தில் இதெல்லாம் செய்யாதே. புதிதாக நிலம் வாங்கி நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்றான். ஆனால் சுந்தரம் அதற்குச் சம்மதிக்கவில்லை. சபாபதி தன் மனைவியிடம் தன் மகன் செய்ய விரும்புவதைக் கூறி

'அவன் அப்படிச் செய்தால் நம் குடியே முழுகி விடும்” என்று புலம்பினான். அவளோ கவலைப்படாமல் “எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும். நீங்கள் சுந்தரத்தின் மனம் நோகும் படி எதுவும் செய்யாதீர்கள்" என்றாள். சபாபதிக்குத் தன் மனைவி கூறியது சற்றும் பிடிக்கவில்லை. அவன் தன் நிலத்தில் சுந்தரம் எதுவும் செய்யக் கூடாது எனக் கூறி விட்டான்.

அந்த ஊரில் பசுபதி என்ற பணக்கார விவசாயி இருந்தான். அவனுக்கு நூறு ஏக்கர் நிலம் இருந்தது. அவளது ஒரே மகள் உமையாள். சுந்தரத்தின் அழகைப் பார்த்து அவள் அவனைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள். பசுபதியும் சுந்தரத்தை அழைத்து “நீ என் மகளைக் கல்யாணம் செய்து கொள். உனக்கு பத்து ஏகர் நிலம் கொடுக்கிறேன்.அதில் நீ உன் இஷ்டப்படி விவசாயம் செய்து கொள்ளலாம்" என்று கூறினான்.

சுந்தரத்திற்கு இது பிடித்ததே. ஆனால் சபாபதியும் பசுபதியும் ஜென்ம விரோதிகளாயிற்றே. இருவருக்கும் பேச்சு வார்த்தை கூடக் கிடையாது. அதனால் பசுபதி "நீ என் மகளை மணந்து கொண்டால் நீயும் அவளும் உன் பெற்றோர்களுடன் வாழக் கூடாது. தனிக் குடித்தனம் போக வேண்டும்” என்ற நிபந்தனையைக் கூறினான். தன் தந்தை எப்போது வேறு நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்யச்  பசுபதியின் மகளைப் பற்றி சுந்தரம் கூறி அவன் விதித்த நிபந்தனையையும் தன் பெற்றோர்களிடம் கூறினான். அதைக் கேட்டு சுந்தரத்தின் தாயார் திடுக்கிட்டாள். தன் மகன் தனியாகப் போய் விடுவானோ என அவள்

பயந்து தன் அண்ணன் கோவிந் தனைப் போய்ப் பார்த்தாள். கோவிந் தன் அவளது கூடப் பிறந்தவன் அல்ல. அவளது சிற்றப்பாவின் மகன். அவனிடம் ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த மூலிகை இருந்தது. அதைக் கொண்டு எவ் விதக் கல் மனதையும் அவனால் மாற்றி விட முடியுமென்று எல்லோரும் நம்பினார்கள். அவ்வாறு மனம் மாற ஒருவன் அவனிடம் தொடர்ந்து இரு நாட்கள் செல்ல வேண்டுமாம். இரண்டாவது நாளில் தான் மாற்றம் தெரியுமாம்.

கோவிந்தன் எல்லாவற்றையும் சுந்தரத்தின் தாயிடமிருந்து விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு 'நீ உன் மகளுக்குக் கல்யாணம் செய்து வைத்து விட்டு அவளுக்கு என்ன அறிவுரை கூறினாய்? தனிக் குடித்தனம் போகும்படித்தானே? இப் போது உன் நிலை உன் மகளின் மாமியாரின் நிலைபோலாகி விட்டது.தன் வினை தன்னைச் சுடும் என்பது உன் விஷயத்தில் சரியாகி விட்டது. நீ உன் மகளைத் திருந்தி நேர் வழிப்படுத்து. அப்போதுதான் உன் குடும்பத்தில் அமைதி நிலவும்” என்றான். 

சுந்தரத்தின் தாயோ "இப்போது நான் என் மகள் விஷயம் பற்றிப் பேச வரவில்லை. சுந்தரத்திற்கு எங்கள் மீது கொஞ்சமும் பாசமில்லாது இருக் கிறதே. அவன் மனதை மாற்றும்படி கேட்டுக் கொள்ளவே உன்னிடம் வந்தேன்” என்றாள். கோவிந்தனும் “அது பற்றி கவனிக்கிறேன். ஆனால் உன் மகள் மனம் மாறினால் தான் சுந்தரத்தின் மனதையும் நான் மாற்ற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்" என்று கூறி அவளை அனுப்பினான்.

சுந்தரத்தின் தாயார் கோவிந்தன் கூறியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் மகன் சுந்தரத்தை மட்டும் இரண்டு நாட்கள் கோவிந்தனி டம் அனுப்பி வைத்தால் அவன் மனம் மாறி விடும் என்று நினைத்தாள். அவள் தன் வீட்டை அடைந்து தன் கணவனிடம் ''இனி நீங்கள் கவலைப் படாதீர்கள். கோவிந்தனிவிடம் எல்லாம் விவரமாகச் சொல்லி விட்டேன். அவன் சுந்தரத்தின் மனதை மாற்றி விடுவான்” என்றாள். .. சபாபதியும் "இவ்வளவு நாட்களாக நீதான் சுந்தரத்திற்குப் பரிந்து பேசிக் கொண்டிருந்தாய். இப்போது அவன் உன் கையை விட்டு நழுவி விடுவானோ என்ற நிலை வந்ததும்  உன் மனமும் மாறி விட்டது பார்" என்று கேலியாகக் கூறினான். அவளோ “எதற்கும் வேளை என்பது வர வேண்டும். அது சுந்தரம் விஷயத்தில் இப்போது தான் வந்திருக்கிறது அவன் கோவிந்தனிடம் இரண்டு நாட்கள் சேர்த்தாற் போலப் பார்த்து விட்டு வந்தால் அவன் மனம் மாறி விடும். நாம் சொல்கிறபடியே நடப்பான். எல்லாம் விதிப்படிதானே நடக் கும் ” என்று வேதாந்தம் பேசினாள்.

அதன் பின் அவர்கள் சுந்தரத்தை அழைத்து ‘“மகனே! நீ இஷ்டப்பட்டதற்கு மாறாக ஒருப்போதும் நாங்கள் சொன்னதில்லை. உன் கல்யாண விஷ யத்திலும் அப்படித்தான் நடப்போம். இன்று நீ உன் மாமன் கோவிந்தனின் வீட்டிற்குப் போய் அவரது ஆசி களைப் பெற்றுக் கொண்டு வா. அதன் பின் உன் கல்யாணம் ஜாம் ஜாமென்று நடக்கும்” என்று கூறினார்கள். சுந்தரமும் தன் பெற்றோர் கூறியபடி கோவிந்தனைப் போய்ப் பார்த்தான்.

கோவிந்தனும் அவனையே எல்லா விஷயங்களையும் சொல்லச் சொன்னான். சுந்தரம் தன் கல்யாணம் பற்றிக் கூறவே கோவிந்தனும் “இதோ பார். உன் தாயார் தன் மகளைத் தனிக்குடித்தனம் போகும்படி அறிவுரை கூறியவள். அதனால் உன் மனைவியை நீ உன் தாயாருடன் வசிக்க வைத்தால் அவள் உன் மனைவியைக் கொடுமைப்படுத்துவாள். அதனால் நீ கல்யாணமான பின் தனிக் குடித்தனம் போவதுதான் நல்லது. உன் தந்தை எப்படிப்பட்டவனென்று ஊரே அறியும். அவன் உன் தாயார் கிழித்த  கோட்டைத் தாண்ட மாட்டான். இப்படிப் பட்டவர்களிடம் நீ இவ்வளவு  நாட்கள் இருந்ததே அதிசயம்தான். உன் தாய் தந்தையர் வயது காலத்தில் உன் உதவி இல்லாமல் கஷ்டப்பட வேண்டுமென்று அவர்கள் தலையில் எழுதி இருக்கிறது” என்றான். 

சுந்தரமோ "மாமா! இந்தக் கதை எல்லாம் எனக்கு எதற்கு? உங்களது ஆசிகளைப் பெற்று வர என் பெற்றோர்கள் என்னை அனுப்பினார்கள். அதனால்தான் உங்களிடம் வந்தேன் என்றான். அப்போது கோவிந்தன் ''உன் அப்பனுக்கு எது நல்ல வேளை என்று கூட தெரியவில்லையே. பழுத்த ராகு காலத்தில் உன்னை அனுப்பி இருக்கிறானே. நாளைக் காலையில் வா. என் ஆசிகளை அளிக்கிறேன்” என்றான்.

சுந்தரம் அங்கிருந்து தன் வீட்டை அடைந்து “அவன் என் மாமனா? உங்கள் இருவரையும் கண்டபடி பேசுகிறானே. எனக்கே என்ன செய்ய வேண்டுமென்று தெரியும். தாய் தந்தையிடம் பாசம் கொள்ள வேண்டுமென பிறர் சொல்லித்தான் எனக்குத் தெரிய வேண்டுமா? இனி என் மாமன் வீட்டு வாசலைக் கூட மிதிக்க மாட் டேன். எப்படியெல்லாம் இழிவாக அவன் உங்களைப் பேசி விட்டான்!'" என்று ஆத்திரம் பொங்கக் கூறினான். அது கேட்டு சுந்தரத்தின் தாயார் திடுக்கிட்டாள். சுந்தரம் தொடர்ந்து இரண்டு நாட்கள் தன் மாமன் வீட் டிற்குப் போய் வந்தால் அவனது மனம் மாறி தான் சொன்னபடியெல்லாம் கேட்பான் என எண்ணி இருந்தாள். ஆனால் அது இப்போது நடக்காது போலிருக்கிறது. சபாபதியோ ''ஆகா! சுந்தரத்திற் குத்தான் என் மீதும் தன் தாயின் மீதும் எவ்வளவு பாசம் உள்ளது! அவனது மாமன் எங்களைத் திட்டியதும் அவன் என்ன நினைத்தான்! இப்படித் தன் பெற்றோரைக் கண்டபடி திட்டும் தன் மாமன் வீட்டுப் பக்கம் கூட இனிப் போகக் கூடாது எனத் தீர்மானித்து விட்டானே. இவன் என் மீது மிகுந்த பாசம் கொண்டவனே. இதுவரை இவனைத் தவறுதலாக எடை போட்டு விட்டேன். இவன் என்னையும் தன் தாயையும் விட்டுப் போகவே மாட்டான். அவன் விருப்படியே கல்யாணத்தையும் செய்து வைக்கிறேன். பசுபதி என் விரோதிதான். ஆனாலும் என் மகனின் பிற்கால வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நானே பசுபதியைக் கண்டு பேசி ஒரு நல்ல முடிவிற்கு வருகிறேன்” என நினைத்தான்.

அப்போது சபாபதிக்குத் தன் மகன் தன் மீது எவ்வளவு பாசம் கொண்டி ருக்கிறான் என்பது புரிந்தது. அவன் தன் அகம்பாவத்தை விட்டு பசுபதி யைக் கண்டு பேசி சுந்தரத்தின் கல்யாணத்தைச் செய்து வைத்தான். சுந்தரத்தின் தாயும் தன் மகளுக்கு நல்ல அறிவுரை கூறி அவளை மாமியார், மாமனாருடன் சேர்ந்து வாழும் படிச் செய்தாள். சுந்தரமும் தனிக் குடித்தனம் வைக்கவில்லை: பசுபதியும் தன் நிபந்தனையை வற்புறுத்தவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் யாவரின் மனமாற்றமே.

#தமிழ்கதை #சிறுகதை #வாழ்க்கை #உணர்வுகள் #தமிழ்இலக்கியம்


Post a Comment

Previous Post Next Post